வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக்கல்வி நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்கள்
கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்விக்கான பாடநூல்களை வழங்குவது என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது முன்னெடுத்துள்ளது
1 முதல் 12ஆம் வகுப்பிற்கான "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் புத்தகம் அச்சிடப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை மாணவர்களிடம் திறம்படக் கொண்டு செல்வதற்கென கீழ்க்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
1. பாடவேளை மற்றும் பொறுப்பு ஆசிரியர்:
பள்ளிக்கல்வி கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நன்னெறிக் கல்வி பாடவேளையினை முழுமையாகப் பயன்படுத்தி "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தில் உள்ள பாடங்களின் கருத்துக்களை நடப்பு நிகழ்வுகளுடன் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பித்திட வேண்டும்.
10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் நடத்துதல் கூடாது.
நன்னெறிக் கல்வி பாடத்தினை "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தினைப் பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்குக் கற்பித்திட தலைமையாசிரியர் அறிவுறுத்திட வேண்டும்.
2. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்களை" முன்னிறுத்தி போட்டிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்:
இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பள்ளி அளவிலான மன்றப் போட்டிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" அடிப்படையில் போதை எதிர்ப்பு மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல்:
பள்ளிகளில் செயல்படுத்தப்படும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, இணையப்பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்றுத்தருதல் வேண்டும்.
போதை எதிர்ப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):
வேண்டவே வேண்டாம்
பாதை மாறிய பேதை
சாலை பாதுகாப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):
சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு
விதிகளை மதித்தல்
இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):
நிதானமே விவேகம்
விழிப்புணர்வு வென்றது
இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
விழித்திரு
குழந்தை பாதுகாப்பு
உண்மையின் உரைகல்
குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):
விழிப்புடன் இரு விபரீதத்தைத் தடு
பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல்
சுற்றுச்சூழல் மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):
இயற்கை வளமே நமது ஆற்றல் வளம்
சூழல் காப்போம்
4. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் வழி மாணவர்கள் மனநல மேம்பாட்டினை ஏற்படுத்துதல்:
மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அவர்களை வாழ்வில் மேன்மை அடையச் செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்; வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி வாயிலாக இதனை வழங்க வேண்டும்.
மனநல மேம்பாட்டிற்கான பாடத்தலைப்புகள்: மனவெழுச்சிகளைக் கையாளுதல்; மனத்தடை உடை! வெற்றியை அடை.
5. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் சார்ந்து நல்லொழுக்க சிந்தனைகள் வளர்த்தல் (புத்தகத் தலைப்புகள்):
நல்வழி நட
காலம் தவறாமை
தெளிவான சிந்தனை வித்திடும் சாதனை
மேற்காண் தலைப்புகள் அல்லாமல் பள்ளியின் கல்விசார் / கல்வி சாரா செயல்பாடுகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி பிற தலைப்புகளில் உள்ள நன்னெறி சார்ந்த கருத்துக்களை மாணவர்களுக்குக் கற்பித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது.
இதனைத் திறம்படச் செயல்படுத்திட மாவட்ட அளவில் திட்டத்தினை வகுத்து அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்களுக்கு உரிய சுற்றறிக்கையினை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது

