Search This Blog

Sunday 8 May 2022

பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல! அரசின் கடமை!! முதலமைச்சர் தலையிட்டு உறுதிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


தமிழக நிதியமைச்சர் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார். 


இந்த அறிவிப்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நம்பிக்கையுடன் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைiயும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


                மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட உத்தரவாதம் அளித்து வரும் நிலையில், அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிதியமைச்சர் முதலமைச்சரின் கருத்துக்கு மாறாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது பொருத்தமற்றது.


                மாண்புமிகு நிதியமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பொருத்தமற்றதாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.


1.ராஜஸ்தான் அரசுக்கு பி.எப்.ஆர்.டி.ஏ. அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். தனிநபர் கணக்கில் இருக்கிற பணத்தை எடுக்கும் பிரச்சினை ராஜஸ்தான் அரசுக்கு இருக்கிறதே தவிர, தமிழக அரசு பி.எப்.ஆர்.டி.ஏ.யில் சேரவில்லை என்கிற போது தமிழகத்திற்கு அந்தப் பிரச்னையே கிடையாது. எனவே இதை மேற்கோள்காட்டுவது பொருத்தமற்றதாகும்.


2.மாண்புமிகு நிதியமைச்சர் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் 15 லட்சம். ஆனால் 9 லட்சம் பேர் மட்டும் தான் தற்போது பணியில் இருக்கிறார்கள். எனவே நிரப்பப்படாத 6 லட்சம் பேரின் பணியையும் சேர்த்து, பணியில் இருக்கும் 9 லட்சம் பேர் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே, நிதிச்சுமை என காரணம் காட்டுவது சரியல்ல.


3. ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையில் மட்டும்  நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல. அது நவீன தாராளமய கொள்கையை அமல்படுத்துகிறவர்கள் ஊழியர்களுக்கு பென்சன் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கிற வகையில் சமீபத்திய காலத்தில் சொல்லப்படுகிற வாதங்களே தவிர அதில் புதிதாக ஏதும் கிடையாது.  நவீன தாராளமய கொள்கை முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அறிக்கையை, சமூக நீதியை நிலைநாட்டுகிற ஒரு அரசின் அங்கமாக இருக்கக்கூடிய நிதியமைச்சர் மேற்கோள்காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.


4.            நிதியமைச்சர் புதிய பென்சன் திட்டத்திற்கு நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 50 ஆயிரம் ஒதுக்க வேண்டியதிருக்கும் என்றும், பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கினால் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சராரியாக ரூ. 2 லட்சம் ஒதுக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓய்வூதியத்திற்காக எந்த காலத்தில் வாங்குகிற சம்பளத்தில் 40 சதவிகிதம் ஒதுக்கப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும்.


                எனவே, ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்  மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையையும், அதன் நியாயத்தையும் கணக்கில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

No comments:

Post a Comment