Search This Blog

Thursday, 25 June 2026

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 


பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்




2026 ஜூலை மாதத்திற்கானப் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 03.07.2026, வெள்ளிக் கிழமை அன்று நடத்துதல் சார்ந்து கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாநில திட்ட இயக்குனரால் வழங்கப்பட்டுள்ளது 





2026-2027 கல்வியாண்டில் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, தரமான கல்வி மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கிட அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.




பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் - ஜூலை 2026


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் தொடர்ச்சியான பங்கேற்போடு மாதம்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 




அதன்படி, 2026 ஜூலை மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 03.07.2026, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை கீழ்காண் கூட்டப் பொருள்கள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.




I. கூட்டப் பொருள்கள்


1. 100% மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் இல்லா பள்ளி (Zero Dropout)


👉பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்து, பள்ளிக்கு வராத அல்லது பள்ளியை விட்டு விலகிய குழந்தைகளை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.



👉மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை உறுதி செய்தல், இடைநிற்றலுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுதல், பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் “100% சேர்க்கை - 0% இடைநிற்றல்” என்ற இலக்கை அடைய தேவையான செயல்திட்டங்களை வகுத்தல்.





2. உயர்கல்வி வழிகாட்டி - உயர்கல்வி நிறுவனங்களில் 100% சேர்க்கையை உறுதி செய்தல்



👉தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன் இணைந்து நிதி உதவி, சான்றிதழ்கள் அல்லது பெற்றோர் அனுமதி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அடையாளம் கண்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் சிறப்பு மாணவர் குறைதீர்ப்பு முகாம்களில் பங்கேற்கச் செய்து, அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்.




👉பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்தல்.




👉மாவட்ட உயர்கல்வி கட்டுப்பாட்டு அறைகள் (DCRs) குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உதவி தேவைப்படும் மாணவர்களை உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புதல் வேண்டும்.




👉பெற்றோர் ஆதரவு இல்லாதோர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் (CWSN) மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்.




3. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACiS) - 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு



👉10ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்துகொள்ள பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளுதல்.




👉மாணவர்கள் வெற்றி பெறுவதற்காக "மணற்கேணி" செயலியின் "தொடர்ந்து கற்போம்" பகுதியில் உள்ள குறைந்தபட்சக் கற்றல் கையேடுகளை (MLM) பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும்.




👉மேலும், மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் நேர்மறை மனப்பாங்கையும் வளர்க்க ஆதரவு வழங்க வேண்டும்.





👉தேர்வு அட்டவணை மற்றும் MLM பயன்பாடு தொடர்பான செயல் விளக்கக் காணொளியினை QR குறியீட்டை ஸ்கேன் செய்து பெறலாம்.




4. ஆட்டிசம்: தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும் | UDID (Unique Disability ID Card)



👉பள்ளியில் பயிலும் ஆட்டிச நிலை மற்றும் அறிவுசார் குறைபாடு கொண்ட மாணவர்கள் மற்றும் UDID அட்டை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை SMC உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.




👉ஆட்டிசம் குறித்த உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் UDID (Unique Disability ID Card) அட்டையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் (விழிப்புணர்வு காணொளி - QR).




👉UDID பெறுவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விவாதித்து, UDID தேவைப்படும் அனைத்து மாணவர்களும் UDID பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.





5. முன்னாள் மாணவர்கள் (Alumni) - அரசுப் பள்ளித் தூதுவரின் விவரங்களை TNSED Parent App-ல் பதிவேற்றம் செய்தல்


👉அரசுப் பள்ளிகளின் மீது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பள்ளி வளர்ச்சி மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், அனைத்து பங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் நபராக அரசுப் பள்ளித் தூதுவர்கள் (School Ambassadors) நியமிக்கப்பட உள்ளனர்.




👉முதற்கட்டமாக நூறாண்டு கடந்த பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 8,209 பள்ளிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.




👉இதற்காக, பார்வை-4-ல் வழங்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்த முன்னாள் மாணவர்களிலிருந்து SMC கூட்டத்தில் தேர்வு செய்து தீர்மானமாக பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளித் தூதுவரின் விவரங்களை TNSED Parent App-இல் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.




6. நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP)



a) பள்ளி மேம்பாட்டுத் தேவைகள் கண்டறிதல் மற்றும் ஆதரவு திரட்டல்:


👉பள்ளியின் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் பிற மேம்பாட்டுத் தேவைகளை விவாதித்து SMC தீர்மானங்களாக பதிவு செய்தல்.



👉NSNOP வழியாக நன்கொடையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களிடமிருந்து பள்ளி ஈடுபாடுசார் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.



👉உரிய பள்ளிக்காக வழங்கப்படும் நோக்குநிதி (Tied Contribution) குறிப்பிட்ட நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.




👉அடையாளம் காணப்பட்ட பள்ளியின் தேவைகளை நன்கொடையாளர்கள் பொருளாக வழங்கும் (Kind Contribution) பங்களிப்புகள் மூலம் நேரடியாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்து, அதற்கான தேவையான அனுமதிகள் மற்றும் ஒருங்கிணைப்பை NSNOP மூலம் மேற்கொள்ளுதல்.




b) NSNOP மற்றும் பள்ளிச் சாளரம் மூலம் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தல்:


👉நன்கொடை வழங்க ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள் (NGOs) தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் NSNOP தளம் வழியாக பங்களிக்கவும், பங்கேற்கவும் ஊக்குவித்தல்.




👉பள்ளிச் சாளரத்தில் பள்ளி செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்தல், SMC Parent App மூலம் பள்ளி ஈடுபாட்டு நடவடிக்கைகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து, சமூகப் பங்கேற்பு மற்றும் ஆதரவை அதிகரித்தல்.






7. மணற்கேணி



a) மணற்கேணி செயலி தரவிறக்கம் மற்றும் பயன்படுத்துதலை உறுதி செய்தல்: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன், அனைத்து மாணவர்களும் மணற்கேணி செயலியினை தரவிறக்கம் செய்து செயலித் தளத்தை அணுகி, பள்ளி நேரத்திற்கு அப்பாலும் கற்றல் மற்றும் தேர்வுத் தயாரிப்பிற்காக தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.



b) விழிப்புணர்வு பதாகைகள் (Posters): மணற்கேணி தொடர்பான பதாகைகள் (Posters) வகுப்பறைகள், பள்ளி அறிவிப்புப் பலகைகள், மாணவர்கள் கூடும் இடங்கள், பெற்றோர் கூட்ட அரங்குகள் மற்றும் SMC கூட்டங்களில் காட்சிப்படுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மணற்கேணி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் (பதாகைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது).





8. எண்ணும் எழுத்தும்



a) கற்றல் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு: வகுப்பு 1 முதல் 3 வரை புதிய பாடநூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள, 'முதல் பருவத்தில் மாணவர்கள் அடைய வேண்டிய முக்கிய கற்றல் விளைவுகள்' குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தல்.




b) 'நான் கற்றவை' பகுதியின் மூலம் மாணவர்கள் கற்றவற்றை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துதல்: ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் இடம்பெற்றுள்ள 'நான் கற்றவை' பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பவற்றை மாணவர்கள் செய்துகாட்ட பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்.





9. 2024–2026 ஆண்டுகளுக்கான SMC உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தல்



👉2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவுறும் நிலையில் இக்காலப்பகுதியில் (Tenure) உறுப்பினர்களாகப் பணியாற்றி பள்ளியின் முன்னேற்றம், பள்ளியின் கல்வித் தர மேம்பாடு, மாணவர் நலன் மற்றும் சமூகப் பங்களிப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு முன்னெடுப்புகளில் சிறப்பான ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தல் மற்றும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுதல்.





10. தீர்மானங்களின் தற்போதைய நிலை அறிக்கை (Resolution Status Update)


👉2024-2026 காலப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை விவரங்கள் பெற்றோர் செயலியில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை (Resolution Status Update) ஆய்வு செய்து உறுதிசெய்தல்.




11. 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளல்


👉2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்த விவரங்களைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்து, நடத்தப்படவுள்ள அனைத்துப் பெற்றோர் கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்.



II. வழிகாட்டுதல்கள்

(அ) பள்ளி மேலாண்மைக் குழுவும், துறை சார்ந்த அலுவலர்களும்:


👉பள்ளிக் கல்வித் துறை மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை நகலினை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.


👉பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட வரும் சூழலில் அதன் விவரங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தலைமையாசிரியர் முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.


👉கல்வி அலுவலர்கள் தவிர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரல்லாத வேறு எந்தவொரு நபரும் பார்வையாளர்களாகக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.



👉பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் உறுப்பினர் வருகை மற்றும் தீர்மானங்களின் திட்டமிடல் உள்ளிட்ட விவரங்களை, கூட்ட நாளன்று இரவு 9 மணிக்குள் "TNSED Parent" (பெற்றோர் செயலி) App-இல் தவறாது பதிவிடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.



👉பருவ மழை அல்லது உள்ளூர் நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நேர்வுகளில் சார்ந்த பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அடுத்துவரும் வேலை நாளில் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடத்திட வேண்டும்.




III. காணொலிகள் / தொடர்புடைய ஆவணங்கள்


பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த செயல்பாடுகளுக்கானக் காணொளிகள் (Best Practices Videos) வருகைப் பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் சார்ந்த செயலியின் காணொலிகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பெறுவதற்கான QR-Code மற்றும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது



SMC Support - Videos & Documents Drive Link: 


👇

CLICK HERE




மேற்காணும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உரிய நேரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சிறப்பாக நடத்திடவும், தீர்மான விவரங்களைப் பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மேலும் விவரங்களுக்கு PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE

மாணவர்களுக்கு வாழ்வில் திறன் மற்றும் விழுமியக் கல்வி கற்பித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 



வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக்கல்வி  நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்கள் 




கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் 




பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்விக்கான பாடநூல்களை வழங்குவது என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது முன்னெடுத்துள்ளது





1 முதல் 12ஆம் வகுப்பிற்கான "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் புத்தகம் அச்சிடப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.





இதனை மாணவர்களிடம் திறம்படக் கொண்டு செல்வதற்கென கீழ்க்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.





வழிகாட்டு நெறிமுறைகள்:

1. பாடவேளை மற்றும் பொறுப்பு ஆசிரியர்:

  • பள்ளிக்கல்வி கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நன்னெறிக் கல்வி பாடவேளையினை முழுமையாகப் பயன்படுத்தி "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தில் உள்ள பாடங்களின் கருத்துக்களை நடப்பு நிகழ்வுகளுடன் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பித்திட வேண்டும்.





  • 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் நடத்துதல் கூடாது.





  • நன்னெறிக் கல்வி பாடத்தினை "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தினைப் பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்குக் கற்பித்திட தலைமையாசிரியர் அறிவுறுத்திட வேண்டும்.






2. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்களை" முன்னிறுத்தி போட்டிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்:



  • இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பள்ளி அளவிலான மன்றப் போட்டிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





3. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" அடிப்படையில் போதை எதிர்ப்பு மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல்:



  • பள்ளிகளில் செயல்படுத்தப்படும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, இணையப்பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்றுத்தருதல் வேண்டும்.




போதை எதிர்ப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • வேண்டவே வேண்டாம்

  • பாதை மாறிய பேதை





சாலை பாதுகாப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு

  • விதிகளை மதித்தல்





இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • நிதானமே விவேகம்

  • விழிப்புணர்வு வென்றது

  • இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

  • விழித்திரு

  • குழந்தை பாதுகாப்பு

  • உண்மையின் உரைகல்





குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • விழிப்புடன் இரு விபரீதத்தைத் தடு

  • பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல்






சுற்றுச்சூழல் மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • இயற்கை வளமே நமது ஆற்றல் வளம்

  • சூழல் காப்போம்





4. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் வழி மாணவர்கள் மனநல மேம்பாட்டினை ஏற்படுத்துதல்:

  • மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அவர்களை வாழ்வில் மேன்மை அடையச் செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.

  • குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்; வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி வாயிலாக இதனை வழங்க வேண்டும்.

  • மனநல மேம்பாட்டிற்கான பாடத்தலைப்புகள்: மனவெழுச்சிகளைக் கையாளுதல்; மனத்தடை உடை! வெற்றியை அடை.





5. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் சார்ந்து நல்லொழுக்க சிந்தனைகள் வளர்த்தல் (புத்தகத் தலைப்புகள்):

  • நல்வழி நட

  • காலம் தவறாமை

  • தெளிவான சிந்தனை வித்திடும் சாதனை





மேற்காண் தலைப்புகள் அல்லாமல் பள்ளியின் கல்விசார் / கல்வி சாரா செயல்பாடுகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி பிற தலைப்புகளில் உள்ள நன்னெறி சார்ந்த கருத்துக்களை மாணவர்களுக்குக் கற்பித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது.





இதனைத் திறம்படச் செயல்படுத்திட மாவட்ட அளவில் திட்டத்தினை வகுத்து அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்களுக்கு உரிய சுற்றறிக்கையினை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது 

Wednesday, 24 June 2026

2026-27 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




2026-27  ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 





மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.




2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.





இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.




2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





மாணவர் குழு ஒதுக்கீடு (House Allocation) 

EMIS-இல் வடிவமைக்கப்பட்டுள்ள 'மகிழ் முற்றம்' (House System) பகுதியிலுள்ள Set House பொத்தானை கிளிக் செய்தவுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக குழு ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், அங்கு கொடுக்கப்பட்டுள்ள House Allocation Excel-யினை கிளிக் செய்து ஆசிரியர்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கான குழு ஒதுக்கீட்டினை தெரிவித்தல் வேண்டும். இதனை 30-06-2026-ற்குள் அனைத்து பள்ளிகளும் செய்திடல் வேண்டும்.




மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் : 

(House Class Leader): ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும். இத்தேர்வானது, குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ/மாணவியர்களின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ 01-07-2026-ற்குள் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.(குறிப்பு: இரு பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்).





மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.





இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும்.




மகிழ் முற்றம் ஆசிரியர் கூட்டமைப்பு 


தலைமை ஆசிரியர் 

மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழி நடத்துதல் வேண்டும் 



5-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் 


ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருத்தல் வேண்டும் (HSTC-HOUSE SYSTEM TEACHER COORDINATOR)


மற்ற ஆசிரியர்களுக்கான குழு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் 


ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுத்தல் வேண்டும் (HOUSE HEAD TEACHER)





5-ற்கும் குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் 


ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் 


மற்ற ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பொறுப்பு ஆசிரியராக குலுக்கல் முறையில் நியமிக்கப்படுத்தல் வேண்டும் 



தலைமை ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் 


மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளுதல் வேண்டும் 




01.07.2026-ற்குள் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு பொறுப்பாசிரியர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் 




மாணவர் குழுத்தலைவர்கள் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு 

மேல்நிலைப்பள்ளி 

11 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


உயர்நிலைப்பள்ளி 

9 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


நடுநிலைப்பள்ளி 

8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


தொடக்கப்பள்ளி 

5 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 



மேலே குறிப்பிட்ட படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத்தலைவர் மற்றும் ஒரு மாணவ அமைச்சர் நியமிக்கப்படுதல் வேண்டும் 



மேலும் இந்த ஆணை பற்றிய தகவல் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறை PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF