Search This Blog

Tuesday, 21 November 2023

இன்று நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் World Television Day தொலைக்காட்சி பெட்டி கடந்துவந்த பாதை முழுவிபரம்




நன்றி:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்


நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள் *

*World Television Day*

                                                                                                                          1936-ல் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு



தொலைக்காட்சி புரட்சிக்கு 1925-ல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 



27.01.1926-ல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

                                                                                                                                                                                        அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

                                                                                                                                                                                     'Television' என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.

                                                                                                                                                                                        நவீன தொலைக்காட்சி பெட்டிகள்

உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி,  தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

                                                                                                                                                                                அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. 



சிறிய பெட்டி வடிவில் கருப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டுது.



20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010-க்கு பிறகு எல்இடி,எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன் தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

                                                                                                                                                                                  பிரம்மாண்ட திரைகள்

திரையரங்கத்தின் திரையைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும், பிரம்மாண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. 



அதேநேரத்தில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி வந்த பெட்டியைப் போன்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பெரும்பாலும் விடைபெற்று விட்டன.

                                                                                                                                                                                                24 X 7 செய்திச் சேனல்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கின. 




நாள்தோறும் சில மணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது, 



பின்னாளில் 24 X 7 என்ற 24 மணி நேரமாக மாறி நிற்கிறது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் பெருகி விட்டன.

                                                                                                                                                                            இணையத்தில் தொலைக்காட்சி

நவீன தகவல் தொடர்புச் சாதனங்களில் இணையம் இன்றியமையாததாகி விட்டது. அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இணையம். 



பொதுமக்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் பல்வேறு சேனல்களைப் பார்த்து வரும் வேளையில், இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு சேனல்களை காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.

                                                                                                                                                                                      இணைய பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லாய்டு போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாக தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். 



அதேநேரத்தில் வீடியோ பதிவுகளை, பல டாட்.காம் மூலமாக பதிவேற்றம் செய்து, ‘வெப். டி.வி.’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலவவிடப்படுகின்றன. 




இதை தொலைக்காட்சியாக அங்கீகரிக்கலாமா என்பதை காட்சித் தொடர்பியல், தகவல் தொடர்பியல் ஆய்வாளர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

                                                                                                                                                                                      தொலைக்காட்சி வரலாற்று தகவல்கள்

1. 1976 ஜனவரி 1 - வானொலியில் இருந்து தொலைக்காட்சி பிரிந்து, தனித் தகவல் தொடர்பு சாதனமானது.



2. 1977 ஆகஸ்ட் 17 - தொலைக்காட்சிக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆராய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1978-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



3. 1981 நவம்பர் 17 - சோதனை முறையிலான வண்ண ஒளிபரப்பு தொடங்கி, இன்சாட்-1 ஏ செயற்கைக்கோள் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இச்செயற்கைக்கோள் செயலிழந்தது.



4. 1983 மார்ச் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு குழு ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இன்சாட் 1-பி செயற்கைக்கோள் மூலம் நிகழ்ச்சிகள் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டன.



5. 1984 ஏப்ரல் 2 - பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் தினமும் முற்பகல் 1 மணி நேரமும், பிற்பகல் 1 மணி நேரமும் கல்வி ஒளிபரப்பு தொடங்கியது.



6. 1988 ஜூலை 6 - சென்னை தொலைக்காட்சியின் 2-வது அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.



7. 1989 பிப்ரவரி 6 - தூர்தர்ஷன் மத்திய நிகழ்ச்சி தயாரிப்பு மையம் டெல்லியில் உள்ள ஆசிய விளையாட்டு அரங்கில் நிறுவப்பட்டது.



8. 1990 செப்டம்பர் 6 - தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வகை செய்யும் ‘பிரச்சார் பாரதி’ மசோதா மக்களவையில் நிறைவேறியது.



9.1996-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின்படி, ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21-ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

                                                                                                                                                                                              நாடு முழுவதும் ஒளிபரப்பான நிகழ்ச்சி

இந்திய அரசு திட்டமிட்டவாறு தொலைக்காட்சியில் சிறுவர் கல்வி, உடல் நலம், தாய்சேய் நலம் தொடர்பான நிகழ்ச்சிகள் 'சைட்' செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. 



காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 8.50 மணி வரையிலும் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. 



இவற்றில் 40 நிமிடம் கன்னடம் அல்லது தெலுங்கு நிகழ்ச்சிகளும், 20 நிமிடங்கள் இந்தி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பட்டன. 



1975-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நிகழ்வும், 1976-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியும் நாடுமுழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                இந்தியாவில் தோற்றம் - வளர்ச்சி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியுடனும், யுனெஸ்கோவின் ஆதரவுடனும் இந்தியாவில் முதல் முறையாக 1959-ம் ஆண்டு அக்டோபர் 15-ம்நாள், இந்திய அரசு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

                                                                                                                                                                                  தொடக்க காலத்தில் வாரம் இரு நாட்களும், பின்னர் நாள்தோறும் 20 நிமிடங்களும் என 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே தெரியும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 



முதலில்சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய இந்திய அரசு, அதன் பின்னர் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க முடிவு செய்தது.

                                                                                                                                                                                      மக்கள் ஆதரவு பெருகவே தொலைக்காட்சி பெட்டிக்கான உதிரி பாகங்களைதயாரிப்பதற்கு, 1965-ல் இந்திய அரசு உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளித்தது. 



இது இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாகஅமைந்தது. 



1967 ஜனவரி மாதம்விவசாய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

                                                                                                                                                                                                                                                                                                        நிகழ்ச்சிகளைத் தடையின்றி பார்க்கும் வகையில் ஒளிபரப்பின் ஆற்றல்அதிகரிக்கப்பட்டது. 



1970-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு 3 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டது.




குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பானது, 1972-ல் மும்பையிலும், 1975-ல் கொல்கத்தா மற்றும் சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

                                                                                                                                                                                                                                                     

1975-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. 




அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து செயல்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 1976 ஜனவரியில், தூர்தர்ஷன் என்ற தனித்த அடையாளத்துடன் இயங்கத் தொடங்கியது.

                                                                                                                                                                                            1980-ல் இந்தியாவில் 9.5 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளைகளில், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சலுகை விலையிலும், தவணைத் திட்டங்களிலும் விற்க ஆரம்பித்ததன் விளைவு, தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.                  



தொலைக்காட்சி வர்த்தகத்தில் கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அதிகம்.

                                                                                                                                                                                                                                                                                                                              செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு

செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம், இந்தியாவில் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் அடுத்தகட்ட நகர்வாக இருந்தது. 



யுனெஸ்கோ குழு, துணைக்கோள்களின் வழி ஏற்படும் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சி அடையும் என்று கருதியது.

                                                                                                                                                                                        அதன் அடிப்படையில் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை, அமெரிக்க தேசிய வான்வழி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, 1975 ஆகஸ்ட் மாதம் ஏடிஎஸ்-6 என்ற துணைக்கோள் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டது.

                                                                                                                                                                                            இது மகாராஷ்டிர மாநில நிலையத்தில் இருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததில், சுமார் 2,500 கிராமங்கள் பயனடைந்தன.

                                                                                                                                                                                                            

கூடுதல் செயற்கைக்கோள்கள்

தொலைக்காட்சி நிலையங்களால் 80 கி.மீ. வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்பதால், இந்தியாவில் உள்ள 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற அதிக செலவில் ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இதனால் 1982-ல் இன்சாட்-1 ஏ செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment