Search This Blog

Sunday 9 January 2022

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பயிற்சி என்னும் பெயரில் ஒரே இடத்தில் ஆசிரியர்களைக் குவிக்கும் திட்டமிடலைத் தடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள்



கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளி எனக் கட்டுப்பாடுகளோடு மக்களின் உயிர்காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது,


பேரிடர்சூழலில் பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்து செல்வதே ஆசிரியர்களுக்குச் சவாலாக இருக்கின்ற இந்த பேரிடர் சூழலில் பயிற்சி என்னும் பெயரில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள மொத்த ஆசிரியர்களின் சரிபாதி எண்ணிக்கையை ஒரே இடத்தில் கூட செய்து பயிற்சி அளிக்கிறோம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் உயிரோடு விளையாடுவது போன்ற ஒரு நடவடிக்கையை கல்வித்துறை எடுப்பது கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு வழிவகை செய்ய வாய்ப்பாக இருக்குமே தவிர,  இச்சூழலில் வேறொன்றுக்கும் வாய்ப்பினை வழங்காது.


இத்தனை அவசரமாக  இப்பயிற்சியை வழங்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. 


மாணவர்களுக்கு இன்னும் அடிப்படைக் கல்வியே முறையாக கற்பிக்கும் சூழல் இன்னும் முழுமை அடையாமல் இருக்கும் பேரிடர்சூழலில், கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சிக்கு இத்தனை அவசரம் ஏன் காட்ட வேண்டும்? என்பது பெருத்த கேள்வியை எழுப்புகின்றது.


ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்து, பயிற்சிக்கான கருத்தாளர்களின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஆசிரியர்களுக்கு அவர்களது குறுவள மையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் பயிற்சியை வழங்குவது ஒன்றே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.


இதன்காரணமாக பயிற்சி இன்னும் 10 நாட்கள் தள்ளிப்போனாலும், அதனால் குறை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சியினைக் கையேடு வடிவில் தயாரித்து வழங்கும்  நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளலாம். அதனை விடுத்து,


கருத்தாளர்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்பதற்காக, ஒரு ஒன்றியத்தில் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களையும்  ஒரே இடத்தில்  கூடச் செய்வதும்,


10 நாட்களுக்குத் தினந்தோறும் 30 கிமீ கும் அப்பால் பேரூந்துகளில் பயணிக்கச் செய்வதும், ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் செயலன்றி வேறில்லை.


இதில் உடனடியாகப் பள்ளிக்கல்வி அமைச்சர்  தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பயிற்சியினை ஒத்திவைத்து, 


தக்க ஏற்பாடுகள் செய்து, பின்பு பயிற்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


சி.சதிஷ்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

கல்வியாளர்கள் சங்கமம்

1 comment: