Pages

Sunday, 1 January 2023

அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்கிறார்கள். இது ஆங்கிலப் புத்தாண்டென யார் சொன்னது? அப்படி கூறுவது சரிதானா?

 

அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்கிறார்கள்.
இது ஆங்கிலப் புத்தாண்டென யார் சொன்னது?

எல்லோரும் அப்படிச்  சொல்வதால் அதுவே உண்மையாகிவிடாது.

ஆங்கிலேயர் அல்லாதோரும் இதனைக் கொண்டாடுகிறார்கள்.

இது கிரிகோரியன் காலண்டர் எனும் நாள் கணக்கு முறை.

கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.

மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது.

இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும்.

இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது.

பிப்ரவரி 24 1582 ல் அப்போதைய திருத்தந்தையான  பதின்மூன்றாம் கிரிகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது.

இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வந்தது.

இந்த நாட்காட்டியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.

மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது.

இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும்.

பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன.

கிரிகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இரவு பகல் நாள்,  நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.

அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.

மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன.

1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின.
இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது.

கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும்.

1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும்.

ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப் (நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும்.

லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும்.

பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது.

ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது.

எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியானது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்த நாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது.

இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது.

இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கேற்ப சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது.

அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது.

ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

கி.மு-கி.பி என வரையறை செய்த முறைக்கு அனோ டொமினி என்று பெயர்.

இந்த கி.மு-கி.பி வரையறையை உருவாக்கியவர் ரோம் நகரைச் சேர்ந்த டயோசினியஸ் எக்ஸிகஸ் கிபி 525 ல் இந்த முறையை உருவாக்கினார்.

சனவரி mēnsis Iānuārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். தொடக்கத்திற்குரிய ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்.

பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். பெப்ருவா மாதம்.
ரோமானியத் தூய்மைத் திருவிழா.

மார்ச்  mēnsis Mārtius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம். ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்.

ஏப்ரல் mēnsis Aprīlisஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள், ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம்.

மே mēnsis Māius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்.

சூன் mēnsis Iūnius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம். திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்.

சூலை mēnsis Iūlius என்ற லத்தீன் மொழியிலிருந்து, "ஜூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ் சீசர் பிறந்த மாதம்.

ஆகத்து mēnsis Augustus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். அகஸ்தஸ் மாதம்.

செப்டம்பர் mēnsis september என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஏழாவது மாதம்

அக்டோபர் mēnsis octōber என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் எட்டாவது மாதம்.

நவம்பர் mēnsis november என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம்.

திசம்பர் mēnsis december என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதம்.

உலகம் முழுமையும் ஒரே ஆண்டை ஏற்றுக் கொண்டாயிற்று. இப்போது அதைக் கொண்டாடாதே என்று ஒரு கூட்டம் இங்கு கிளம்பியுள்ளது. எதைக் கொண்டாடுவது என்பது அவரவர் உரிமை.

கிரிகோரியன் என்பது ஐரோப்பியத் திமிர் என்றால் இங்கு எழும் குரலும் அதற்கு இணையான வேறொரு திமிர். ஒரு நாளைக் கடத்துவது என்பதை தாண்டி இதில் ஆரவாரம் செய்ய ஏதுமில்லை.

தமிழருக்கு தை மாதமே புத்தாண்டு.
யுகாதி, கொல்லம், ஹிஜிரி என்று அவரவருக்கும் ஆண்டுகள் உண்டு.

2023 முன் வாழ்த்துகள்.

சூர்யா சேவியர்
31-12-22

No comments:

Post a Comment